அகாயக்குளப்பிள்ளையார் வருடாந்த மஹோற்சவம்.
அகாயக்குளப்பிள்ளையார் ஆலயத்தில் மஹோற்சவமானது சித்திரை பெளர்ணமி நாளை இறுதி நாளான தீர்த்தோற்சவமாக கொண்டு பத்து தினங்கள் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. இவ் உற்சவ கலங்களில் இரு வேளைகளிலும் யாக பூசையும் துவஜஸ்தம்பத்திற்கு அபிஷேகமும் திக்குகளில் பலியும் நிகழும். இதனைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரம் விசேட தீபாராதனையும் அதனை தொடர்ந்து கொடி குடை ஆலவட்டம் முதலிய சகல விருதுகளுடனும் திருமுறை ஓதுதல் முதலியவற்றுடனும் அர்ச்சனையும் இடம்பெறும்.வீதி வலமாக சுவாமி ஈசான மூலையை அடைந்ததும் யாகத்தில் பூர்ண ஆகுதியும் தீபாராதனையும் நடைபெறும்.
உற்சவத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு வகை அலங்காரமும் இடம்பெறும். எட்டாம் திருவிழா வேட்டைத்திருவிழா எனப்படும். அன்று மாலை நிகழும் மிருக வேட்டைக்கு சுவாமி குதிரை மீது ஏறி வேட்டையாடச்செல்வார்.
உற்சவங்களில் தலையானது தேர்த்திருவிழாவாகும்.அன்று அதிகாலை விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று பஞ்சமுக விநாயகரை சுற்றி வசந்த மண்டபத்திலே ஜந்து சிவாச்சாரியார்கள் சிவப்பு உடை உடுத்தி பூசை வழிபாடுகள் இடம் பெற்று விநாயகரை பீடத்தில் சுமந்து வந்து தேரில் ஏற்றுவர். விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து தேரை இழுக்கத்தொடங்குவர்.
தேர் சுற்றி வந்ததும் சுவாமிக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும். இந்நிகழ்வின்போது ஜந்து சிவாச்சாரியார்கள் தாமும் பச்சை உடை அணிந்து விநாயகரை சுற்றி நின்று அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து ஜந்து பஞ்சாராத்தி காட்டுவார்கள் பின் சுவாமியை இருப்பிடத்திற்கு எழுந்தருளச்செய்வர்.
இறுதி நாள் காலை தீர்த்தோற்சவமானது திருமஞ்சன கிணற்றில் நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும். அதனைத்தொடர்ந்து தம்ப பூசை முடிந்தபின் உற்சவ மூர்த்திக்கு ஊஞ்சல் விழா செய்து மூர்த்தியை ஸ்தம்ப மண்டபத்துக்கு எழுந்தருளிச்செய்வர். பின்பு வீதிவலமாக உற்சவ மூர்த்தியை எழுந்தருளச்செய்து சந்தி விசர்ச்சனம் செய்து வெளிவீதி வலஞ்செய்த பின்பே அன்று உள்வீதி வலஞ் செய்வார். அப்படி வரும் போது இந்திரன் முதல் அக்கினி திக்குவரை மங்கல வாத்தியத்துடனும் அக்கினி முதல் யமதிசை வரை வேதபாராயணத்துடனும் யமதிக்கு முதல் நிருதிவரை தமிழ் வேத பாரணத்துடனும் நிருதி முதல் வருணதிக்கு வரை சங்கு நாதத்துடனும் வாயுமுதல் குபேரன் வரை கீதவோசையுடனும் குபேரன் முதல் ஈசான திக்குவரை எதுவித ஓசையுமின்றி மெளனமாகவும் மூர்த்தியை எழுந்தருளிவித்து ஈசான் முதல் வாயில் வரை சகல வாத்திய கோஷங்களுடனும் வந்து இருப்பிடம் சேர்வார்.
வருடாந்த மஹோற்சவ உபையகாரர்கள்.
1 ம் திருவிழா – வ.சுப்பிரமணியம் குடும்பம்
2 ம் திருவிழா – நா.திருநாவுக்கரசு குடும்பம்
3ம் திருவிழா – சு.அருணாச்சலம் குடும்பம் , க.அம்பலவாணர் குடும்பம்
4 ம் திருவிழா – சேனாதிராசா குடும்பம்
5 ம் திருவிழா – சின்னத்துரை சிவபாக்கியம் குடும்பம், Dr.நாகரத்தினம் குடும்பம்
6 ம் திருவிழா – வ.கனகசபை குடும்பம் , த.இராமலிங்கம் தம்பிராசா குடும்பத்தினரும் மற்றும் தம்பு இராமலிங்கம் பரம்பரையினரும்.
7 ம் திருவிழா – ந.கந்தஞானியார் குடும்பம்
8 ம் திருவிழா – சண்முகம்பிள்ளை குடும்பம் , சி.ஞானசேகரம் குடும்பம்
9 ம் திருவிழா – ச.கந்தையா குடும்பம்
10 ம் திருவிழா – வி.அம்பலவாணர் குடும்பம்